நாம் மகிழ்ச்சியாக இல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

"போதுமான பணம் இல்லை"
"மாமியார் கொடுமை"
"கல்யாணம் ஆகவில்லை"
"வேலை பிடிக்கவில்லை"
"என்னை யாருக்கும் பிடிக்கவில்லை"

பொதுவாக, இப்படி நமக்கு
அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம்தானிருக்கும். அதாவது நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம். 'மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப் படுகின்றன.
இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்:

முதலில் தற்போதைய மனநிலையில் உங்களுடைய மகிழ்ச்சியின் அளவீடு என்ன என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் (ஒன்றிலிருந்து பத்துக்குள்). இப்போது கண்களை மூடி உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுங்கள். அப்போது என்ன உடை அணிந்திருந்தீர்கள், உடனிருந்தவர்கள் யார், எங்கு நடந்தது, என்னவிதமான சூழல் இருந்தது, என்ன விதமான வெப்ப நிலை இருந்தது போன்ற நுணுக்கமான விபரங்களையும் கூட நினைவில் கொண்டுவாருங்கள்.

வாழ்க்கையில் அப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படவே இல்லை என்று வாதம் செய்கிறவர்கள், நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க எப்படிப்பட்ட சூழல் வேண்டும், என்ன நடக்க வேண்டும், அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யுங்கள்.

இப்போது உங்கள் மனநிலையை உற்றுக் கவனியுங்கள். உங்கள் மகிழ்ச்சியின் அளவீடு என்ன? கண்டிப்பாக முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது அல்லவா? அப்படியானால் உங்கள் மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். உங்கள் சூழல் மாறவில்லை, வெளியிலிருந்து எதுவும் புதிதாக வந்து ஒட்டிக்கொள்ளவில்லை, கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டவில்லை. ஆனாலும் உங்களால் மகிழ்ச்சியின் அளவீட்டினை மாற்ற முடிந்ததென்றால் உங்கள் கையில்தானே இருக்கிறது மகிழ்ச்சியின் ரிமோட் கண்ட்ரோல்?
மகிழ்ச்சி நம் மனதில்தானிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டீர்களா?

இப்படி நமக்குள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை அவ்வப்போது தொலைத்துவிடுவது சகஜம்தான். ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிக் கொண்டு அழையாத விருந்தாளியாய் மனதில் சம்மணமிட்டுக் கவலை அமர்ந்து கொள்ளும் போதெல்லாம், உடனடியாக அதனை விரட்டியடிக்க ஒரு சிறிய ஆலோசனை இதோ:

1. ஆழமாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுங்கள்.

2. நிமிர்ந்து அமருங்கள். பார்வை நேராக இருக்கட்டும்.

3. பெரிய புன்னகை ஒன்றை முகத்தில் தவழ விடுங்கள்.

4."இப்போது நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்" என்று சொல்லிப்பாருங்கள்.

உங்களுக்கே சிரிப்பு வந்துவிடும். புன்னகைக்கும் போது கவலைப்பட முடியாதென்பதால், 'கீப் ஸ்மைலிங்'. கவலை நெருங்கவே நெருங்காது. கவலைப் படுவதால் ஒரு அணுவையேனும் அசைக்க முடியாதெனும்போது நம் சக்தியை அதில் செலவழிப்பானேன்?
மறக்க மாட்டீங்களே, Keep smiling :-)

0 comments: